கதை சொல்லல் – திரு.தனபாண்டியன் – உளவியல் நிபுணர், NIEPMD

அனைவருக்கும் வணக்கம்,

சமீபத்தில் நான் கலந்துகொண்ட ஒரு நிகழ்வினை இங்கே பகிர்ந்துள்ளேன். நிகழ்வின் விபரம் கீழே காண்க:

தலைப்பு – “கதை சொல்லல்” – சிறப்பு குழந்தைகளின் பெற்றோருக்கான ஓர் நிகழ்வு

பேச்சாளர் – திரு தனபாண்டியன், உளவியல் நிபுணர், உதவி பேராசியர் -மருத்துவ உளவியல் துறை NIEPMD

நாள் – 24 செப்டம்பர் 2020

நேரம் – மாலை 6 முதல் 7:30 வரை

இந்த நிகழ்வை மருத்துவ உளவியல் துறை – NIEPMD மற்றும் தமிழ்நாடு மருத்துவ உளவியலாளர்கள் சங்கம் இணைந்து ஏற்பாடு செய்திருந்தார்கள்

கதை சொல்லல் என்றால் என்ன ?

மனித வெளிப்பாட்டின் மதிப்புமிக்க ஒரு பழங்கால கலை வடிவம் கதை சொல்லல். சுருக்கமாக  சொல்வது என்றால் ஒரு நிகழ்வை, உணர்வோடு விலக்குவது என்பது கதை சொல்லல். மனிதனுடைய பரிணாமவளர்ச்சியில் நாம் பல மாற்றங்களை சந்தித்திருந்தாலும், கதையின் வடிவங்கள் மாறியிருந்தாலும், கதை சொல்லல் என்பது மாறவில்லை.

நம் சமூகத்தை பொறுத்த வரைக்கும் கதை சொல்லல் என்பது அன்றாட வாழ்க்கை முறையில் எதார்த்தமாக நடக்கும் ஒரு விஷயம் ஆகும். குழந்தை பிறப்பதற்கு முன்பிலிருந்தே , கர்பகாலத்திலே குழந்தைகளுடன் பேசும் பழக்கம் நம்மிடம் இருந்த உண்டு. குழந்தை பிறந்து , பிறகு வளர்ந்து முதிர்ந்து உயிர் பிரியும் வரை கதை சொல்லல் என்பது பல்வேறு பரிமாணங்களில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒன்று

கதை சொல்லல் என்பது நம் சமூகத்தில் ஒருங்கிணைத்த விஷயமாக இருப்பதில் சந்தோசம் இருந்தாலும், இன்றைய கால கட்டத்தில் அதை ஒரு WEBINAR மூலம் கற்றுக்கொள்ளவேண்டிய நிலைமையை நாம் அடைந்துள்ளதை நினைக்கும் பொழுது வருத்தமாகவே உள்ளது.

குழந்தைகள் முதலில் தாய் தந்தையரிடம் கதை கேட்டு பழகுவார்கள், 3 வயதுக்கு பிறகு தாத்தா பாட்டியிடம் கதை கேட்பார்கள், உரையாடல் செய்யும் பக்குவம் வந்த பிறகு, சக சிறுவர் சிறுமியரிடம் இருந்து கதை கேட்பார்கள். இப்படி வளரும் குழந்தைகளின் மொழி திறன் சிறப்பாக இருக்கும்

பெற்றோர்கள் தன் பிள்ளைகளுக்கு கதை சொல்லும் பொழுது உணர்ச்சிபூர்வமாகவும், பாசமாகவும் அக்கறையுடன் கதை சொல்வார்கள்.

சுயமாக கதை சொல்ல முடியாதவர்கள் இணையத்தளத்தில் உள்ள கதைகளை கூறலாம், அப்படி கூறும் பொழுது இணையத்தில் இருக்கும் கதைகளை படித்துவிட்டு அதே போல் சொல்லாமல் தன் பிள்ளைகளுக்கு ஏற்றாற்போல்  மாற்றி அமைத்து சொல்ல வேண்டும்

11 வயது நிரம்பியவர்களுக்கு, காட்சி அமைப்புகளுடைய கதைகளை சொல்லலாம். அவர்களின் அதை எப்படி எடுத்துக்கொள்கிறார்கள் என்பதை வைத்து அதற்கு ஏற்றாற்போல், மாற்றம் செய்து கொள்ளலாம்

5 வயது நிரம்பியவர்களுக்கு, கதை கரு முக்கியம் இல்லை, தோன்றியதை சொல்லலாம். அப்படி சொன்னால் குழந்தையும் அதை சொல்ல முயற்சி செய்யும். 5 வயது நிரம்பியவர்களுக்கு, கற்பனை என்பது பெரிய அளவில் இருக்காது, அதனால் தான் கதைகள் மூலம் அவர்களுக்கு நம்முடைய கற்பனைகளை சொல்லி கொடுக்கவேண்டும்

ஒவ்வொரு குழந்தையின் புரிதல் அளவை பொறுத்து கதை சொல்ல வேண்டும், அதே நேரத்தில் அது அவர்களை ஊக்குவிக்கவும், கலந்துகொள்ளவும் தூண்ட வேண்டும்.

கதை சொல்லும் பொழுது, அதில் வரும் கதாபாத்திரங்கள் குழந்தைகளுக்கு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் இல்லையேல் அவர்களுக்கு அதில் ஈடுபாடு இருக்காது.

கவன குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு பெரிய கதைகள் சொல்ல கூடாது. 10 வினாடி மட்டுமே கவனிக்கும் திறன் உள்ள குழந்தைக்கு ஒரு நிமிட கதை கூறுவதை தவிர்க்கவும். அவர்களின் வயது அறிவுத்திறனுக்கு ஏற்றாற்போல் கூற வேண்டும்

உதாரணத்திற்கு இப்போது ஒரு விளையாட்டு பொருள் கீழே விழுந்தால், “அது எப்படி டமால்னு … போயி விழுந்தது பார்த்தியானு” நாடகத்தன்மையுடன் விவரிக்க வேண்டும்.

மனிதர்கள் கதை சொல்லல்  vs கருவிகள் கதை சொல்லல்

  • குழைந்தைக்கு புரிவதற்கு ஏற்றாற்போல் மனிதர்கள் கதைகளை சொல்வார்கள், கருவிகள் அனைவருக்கும் ஒரேமாதிரியாக கதை சொல்லும்.
  • குழந்தையின் மனநிலையை அறிந்து கதையில் வேகத்தையோ, உணர்ச்சியையோ, சுவாரசியத்தையோ கூட்டவோ குறைக்கவோ மனிதர்களால் முடியும். கருவிகள் அதை செய்யாது
  • குழந்தை வாழும் இடத்தை மனதில் இருத்தி கொண்டு, அதில் சம்பந்தப்படும் கதாபாத்திரங்களை வைத்து கதை சொல்ல மனிதனால் மட்டுமே முடியும், கருவிகளால் அதை செய்ய இயலாது.
  • கருவிகள் மூலம் குழந்தைகள் கதை கேட்கும்பொழுது எதிர்புறத்தில் இருந்து எந்த ஒரு உணர்ச்சியும் கிடைக்காததால், அது குழந்தைகை ஊக்கப்படுத்தாது மற்றும் அது மொழித்திறனை பாதிக்கும்
  • கருவிகள் மூலம் கதை கேட்பவர்கள், கிளி பிள்ளை சொல்வது போல் சொல்வார்கள், அதாவது அதன் அர்த்தம், பொருள், புரியாமல் அதை திரும்ப சொல்ல மற்றும் தெரிந்து வைத்திருப்பார்கள். அதனால் அந்த கதையின் மூலம் அவர்கள் கேட்டதை அவர்களால் ஒரு இயல்பான சூழலில் பயன்படுத்த இயலாது

கதைகளின் வகைகள்

  • அறநெறி கதைகள்
  • சமூகக் கதைகள்
  • சமயக் கதைகள்
  • விளையாட்டுக் கதைகள்
  • சிந்தனைக் கதைகள்
  • நம்பிக்கை சார்ந்த கதைகள்
  • நகைச்சுவை கதைகள்
  • வரலாற்று கதைகள்
  • வாழ்க்கைக் கதைகள்
  • உளவியல் சார்ந்த கதைகள்
  • மர்ம கதைகள்
  • பாலியல் கதைகள்
  • கற்பனை கதைகள்
  • அறிவியல் கதைகள்
  • உரையாடல் கதைகள்
  • இயற்கை சார்ந்த கதைகள்
  • கண்டுபிடிப்பு கதைகள்
  • உடல் மன இணைப்புக் கதைகள்

கதைகளை நாம் கீழ்கண்டவாறும் தொகுக்கலாம்:

  • உண்மை கதைகள் – கற்பனை கதைகள்
  • முடிவுறு கதைகள் – முடிவில்லா கதைகள்
  • கேள்வி சூழ் கதைகள் – கேள்வியற்ற கதைகள்

கதை கேட்பவருக்கு ஏற்படும் நன்மைகள்:

  • கவன குவிப்பை அதிகப்படுத்த உதவும்
  • தான் வாழும் சூழலை புரிந்து கொள்ள உதவும்
  • உணர்வுகளை சரியான வழியில் வெளிப்படுத்த உதவும் (பழிவாங்கும் கதைகள், சண்டை சம்பவங்கள் நிறைந்த கதைகளை பக்குவமாக சொல்லி உணர்வுகளை எப்படி சரியான முறையில் வெளிப்படுத்தவேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும்)
  • மொழித்திறனை அதிகரிக்க செய்யும்
  • தோல்விகளை சமாளிக்க கற்றுக்கொடுக்கும்
  • சமூக வரையறைகளை பின்பற்ற உதவும்
  • நினைவாற்றல் அதிகரிக்க உதவும்
  • புதிய சிந்தனைகளை தோற்றுவிக்க உதவும்
  • அன்றாட வாழ்விற்கு தேவையானவற்றை கற்றுக் கொடுக்க உதவும்
  • கசப்பான அனுபவங்களை மறக்க உதவும்
  • உளவியல் சிகிச்சைகளில்  பெரும் பங்கு வகிக்கிறது


கதை சொல்லளினால் ஏற்படும் பயன்கள் 

மூளையில் இருக்க கூடிய மொழிவள பகுதியான wernicke’s area என்பது ஒலியை வார்த்தைகளாக மாற்றி அமைத்து கொடுக்கும். கதை சொல்பவர்களுக்கு இது அதிகமாக தூங்கப்படுவதால் அவர்களின் மொழிவழி திறன் அதிகரிக்கும். உணர்ச்சி சம்பத்தப்பட்ட பகுதியான Amygdala பக்குவப்படும். கதை சொல்லும் குழந்தைகள், புதிய புதிய சிந்தனைகளை கொண்டிருப்பார்கள்.

கதை சொல்லியாக மாற வேண்டுமெனில் நீங்கள் செய்ய வேண்டியவைகள்

  • பகுத்தறிவை கொஞ்சும் தூர வைக்கலாம்  
  • தவறினை ரசிக்க துவங்கலாம்
  • கதையை அதன் போக்கில் போக அனுமதிக்கலாம்
  • இலக்கற்ற கதை கருவை உருவாக்கி ஏதேனும் ஒரு இலக்கில் முடிக்கலாம்
  • கிடைப்பவை எல்லாம் கதையின் மாந்தராக மாற்றலாம்
  • உணர்வை கொஞ்சும் கூட்டிக்  குறைக்கலாம்

கதை சொல்ல என்னென்ன தேவை ?

எதுவுமே தேவை இல்லை. ஏனெனில் உங்கள் மனமே பிரதானம், பெரிய கதை களம் இல்லாதவர்கள், சிறு கதைகள் சொல்லலாம். சிறுகதைகள் சொல்ல முடியாதவர்கள், நடந்த சம்பவங்களை கோர்வையாக  விவரிக்கலாம். வாய் பேச முடியாத, காது கேட்காத குழந்தைகளுக்கு கூட படங்கள் மூலமாகவும், நடிப்பின் மூலமாகவும், நடனத்தின் மூலமாகவும் புரிய வைக்கலாம். குழந்தைகளுக்கு வாயின் மொழியை விட உடலின் மொழி மிக முக்கியம். கதைசொல்லும் பொழுது அதில் வரும் இடங்களை படங்களாக  வரைந்து காண்பியுங்கள், இதற்கு நீங்கள் மிக பெரிய ஓவியராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை.

கதைக்கு மட்டும் தான் எல்லை, கதை சொல்லும் வகைக்கு எல்லையே கிடையாது

கதைகளை செழுமைப்படுத்த உதவுபவை:

  • கதை கரு
  • கதை மாந்தர்கள் (ஒவ்வொரு திரைப்பட இயக்குனர்கள் அவர்களுக்கென்று ஒரு தனி பாணி அமைத்திருப்பது போல்)
  • திடீர் திருப்பங்கள்
  • ஆரம்பம் மற்றும் இறுதி நகர்வுகள்
  • கதை சொல்லும் கால அளவு
  • குரலினை மாற்றியமைக்கும் முறைகள்
  • உடல் மொழி
  • கேட்பவரை சொல்பவராக மாற்றக்கூடிய திறன்
  • உணர்வுகளை அடுத்தவருக்கு கடத்தும் திறன்
  • பயன்படுத்தும் பொருட்கள்
  • வயதிற்கு ஏற்ற தேர்ந்தெடுக்கும் திறன்
  • மொழித்திறன்
  • நெகிழ்வுத்தன்மை
  • கேள்வி எழுப்பும் திறன்
  • புதிய யுக்திகளை உள்நுழைத்தல்

தனிப்பட்ட கருத்து:

இணையதளத்தின் தரக்குறைவு  காரணமாக , பேச்சை முழுமையாக கேட்க முடியவில்லை, அடுத்த நிகழ்வில் இதை சரி செய்வது நல்லது. என்னை போல் பங்கேற்பவர்கள் பலர் MUTE செய்யாததால் நேரம் வீணடிக்கப்பட்டது.  நிகழ்ச்சியை தொகுத்து வழங்குபவருக்கு (Admin, Host) அனைவரையும் MUTE செய்யும் அதிகாரம் உள்ளது, இன்னும் மக்கள் zoom, google meet, webex, skype, போன்ற செயலிகளுக்கு பழகவில்லை என்பதை அறிய முடிகிறது. ஒரு நிகழ்வை நடத்துவதற்கு முன்பு ஒரு சோதனை ஓட்டம் நடத்தி பார்ப்பது நல்லது. தனபாண்டியன் அவர்கள் பேசும் ஒரே காரணத்தால் அனைத்தையும் சகித்துக்கொண்டு கேட்டுக்கொண்டிருந்தேன், புரிந்தவரை இங்கே பகிர்ந்து உள்ளேன், பிழைகளுக்கு மன்னிக்கவும்.

இப்படிக்கு,

சரண்யா & கார்த்திகேயன்

karthiksaranyaparents@gmail.com

One thought on “கதை சொல்லல் – திரு.தனபாண்டியன் – உளவியல் நிபுணர், NIEPMD

Leave a comment