குழந்தைகள் மகிழ்ச்சியுடனும் , விருப்பத்துடனும், கற்றுக்கொள்ள உதவி செய்யும் வழிமுறைகள் – திரு.தனபாண்டியன் – உளவியல் நிபுணர், NIEPMD

அனைவருக்கும் வணக்கம்,

சமீபத்தில் நான் கலந்துகொண்ட ஒரு நிகழ்வினை இங்கே பகிர்ந்துள்ளேன். நிகழ்வின் விபரம் கீழே காண்க:

தலைப்பு – “குழந்தைகள் மகிழ்ச்சியுடனும் , விருப்பத்துடனும், கற்றுக்கொள்ள உதவி செய்யும் வழிமுறைகள் ”

பேச்சாளர்  – திரு தனபாண்டியன், மறுவாழ்வு உளவியல் நிபுணர், உதவி பேராசியர் -மருத்துவ உளவியல் துறை NIEPMD

நாள்  – 25 ஜூன்  2021

நேரம்  – மாலை 7 முதல் 8:30 வரை

இந்த நிகழ்வை மருத்துவ உளவியல் துறை – NIEPMD ஏற்பாடு செய்திருந்தார்கள். இது ஒரு தொடர் நிகழ்வு. வெள்ளிக்கிழமைகளில் மாலை 7 மணி முதல் இரவு 8:30 மணி வரை இந்த நிகழ்வு நடை பெறுகிறது. இது முற்றிலும் இலவசம்.

இந்த நிகழ்வை ஆங்கிலத்தில் எழுதினால் அவர் சொல்ல வந்த விஷயத்தை அர்த்தம் மாறாமல் கூற முடியாது, அதனால் தமிழில் தொகுத்து உள்ளேன்

10 நிமிடம் கால தாமதமாக பங்கேற்றதால் முதல் இரண்டு விதிகளுக்கான  அவருடைய விளக்கத்தை பதிவிடமுடியவில்லை. மற்ற விஷயங்களை தொகுப்பை கீழே காண்க

10 கற்பித்தல் விதிகள்

விதி – 1 : தெரிந்தவற்றிலிருந்து தெரியாதவற்றிற்க்கு   – (From Known to Unknown)

விதி – 2 : எளிமையானவற்றிலிருந்து கடினமானவற்றிற்கு – (From Simple to Complex)

விதி – 3 : முழுமையானவற்றிலிருந்து பகுதிக்கு – (From Whole to Parts)

விதி – 4 : புலன்களால் அறிபவற்றிலிருந்து சிந்தனையால் புரிந்துகொள்பவற்றிற்க்கு  – (From concrete to abstract)

விதி – 5: பகுப்பாய்வில் துவங்கி தொகுத்தலில் நிறைவுறச் செய்தல் – ( From analysis to Synthesis)

விதி – 6 : குறிப்பிட்ட விஷயத்திலிருந்து பொதுவான விஷயத்திற்கு – (From Particular to General)

விதி – 7 : அனுபவத்திலிருந்து பகுத்தறிவிற்கு – (From empirical to rational)

விதி – 8 : உளவியலிலிருந்து தர்க்கத்திற்கு – ( From Psychological to logical)

விதி – 9 : உண்மையானவற்றிலிருந்து மாதிரிக்கு – ( From actual to representative)

விதி – 10 : வரைமுறைக்கு உட்பட்டதிலிருந்து வரைமுறைக்கு அப்பாற்பட்டதிற்கு – (From definite to indefinite)

விதிகளின் விளக்கங்கள்

விதி – 3 : முழுமையானவற்றிலிருந்து பகுதிக்கு – (From Whole to Parts)

உங்கள் குழந்தைக்கு நீங்கள் இப்பொழுது கத்தி அல்லது கத்தரிக்கோல் பற்றி சொல்லிக்கொடுக்க போகிறீர்கள் என்றால் நீங்கள் கீழ்கண்டவாறு ஆரம்பிக்கவேண்டும்:

  1. வீடு என்றால் என்ன என்பதை முதலில் புரியவைக்க வேண்டும்
  2. வீட்டில் சமையலறை எங்கு உள்ளது என்பதை புரிய வைக்க வேண்டும்
  3. பொதுவாக சமைலறையில் காணப்படும் பொருட்கள் பற்றி விளக்க வேண்டும்
  4. சமைலறையில் இருக்க கூடிய கூர்மையான பொருட்களை பற்றி விவரிக்க வேண்டும்
  5. கத்தி என்பது எப்படி இருக்கும், அதோட வடிவும், நிறம், தோற்றம், பற்றி விவரிக்க வேண்டும்
  6. இறுதியாக கத்தியுடைய பயன்பாட்டை பற்றி விளக்க வேண்டும்

சமயல் அறையில் இருந்து ஒரு கத்தியை கொண்டுவருவதற்கு உங்கள் குழந்தைக்கு மேலே குறிப்பிட்ட அனைத்தும் தெரிந்து இருக்கவேண்டும்

விதி – 4  : புலன்களால் அறிபவற்றிலிருந்து சிந்தனையால் புரிந்துகொள்பவற்றிற்க்கு  – (From concrete to abstract)

இது ஒரு முக்கியமான விதி. குழந்தைகள் கர்ப காலத்தில் இருந்தே கற்க தொடங்குகிறார்கள் என்று  நம் முன்னோர்கள்  கூறியிருக்கிறார்கள். சமீப காலத்தில் இதனை சில அறிவியல் கண்டுபிடிப்புகளும் உறுதிப்படுத்தியுள்ளது.

குழந்தைகள் அப்பொழுது எதன் மூலம் கற்க ஆரம்பிக்கிறார்கள் என்றால் அவர்களின் புலன் / புலன் உறுப்புக்கள் மூலம். அதாவது தொடு, கேட்டல் , பார்த்தால் , நுகர் , பார்வை உணர்வுகள் மூலம். (5 Primary Senses). இதை தவிர்த்து மேலும் இரண்டு புலங்களை பற்றி கடந்த  வாரம் திரு கோகுல் அவர்கள் கூறியிருந்தார்கள். அதாவது வெஸ்டிபுலர் ( புவியிருக்கு உள்ள தொடர்பு ), ப்ரோபிரியோசெப்ஷன் (மூட்டுற்கு உள்ள தொடர்பு).

இந்த 7 உணர்வுகளும் குழந்தைகள் கற்றுக்கொள்வதற்கு, மனவளர்ச்சிக்கும் அடிப்படை தேவையாகும். இதனை Piaget உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த புலங்களில் தூண்டல்கள் குறைவாக இருந்தால், அவர்களுடைய புரிந்து கொள்ளும் தன்மை வளர தாமதம் ஏற்படலாம்.

சில குழந்தைகளுக்கு, ஒரு சில புலன்களில் அதிக தூண்டல் இருந்தால், அவர்கள் அந்த புலன் சார்த்த விஷயங்களில் அதிக படியான ஈர்ப்பும், ஆர்வமும் கொண்டிருப்பார்கள்.

இந்த குழந்தைகளுக்கு நீங்கள் கற்றுக்கொடுக்கும் பொழுது கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் Sensory மற்றும் Motor இணைந்து செயல்படும் முறையில் கற்பிக்க வேண்டும்.

விதி – 6 : குறிப்பிட்ட விஷயத்திலிருந்து பொதுவான விஷயத்திற்கு – (From Particular to General)

ஒரு ஆங்கில ஆசிரியர் இலக்கணம் சொல்லிக்கொடுக்கும் பொழுது இலக்கணத்தின் பொருளை ஆரம்பத்தில் சொல்லாமல், அந்த இலக்கணத்தின் எடுத்துக்காட்டுகள் மூலம் கற்பிப்பார்கள்.இது தான் குறிப்பிட்ட விஷயத்தில் இருந்து பொதுவான விஷயத்திற்கு நகருதல்

விதி – 7 : அனுபவத்திலிருந்து பகுத்தறிவிற்கு – (From empirical to rational)

குழந்தைகளுக்கு அனுபவ பூர்வமாக கற்பிப்பது முக்கியம். “A for Apple” என்னும் வாக்கியத்தை படிப்பதாலோ, அல்லது படத்தை பார்ப்பதாலோ அந்த குழந்தைக்கு அது பற்றி புரிய வாய்ப்பு இல்லை. இதையே நீங்கள் அந்த குழந்தை கையில் ஒரு ஆப்பிள் பழத்தை கொடுத்து, சாப்பிடவைத்து பிறகு கற்றுக்கொடுத்தல் அவர்களுக்கு இது நன்றாகள் புரியும். ஏனென்றால் அனுபவ ரீதியாக கற்றுக்கொடுக்கும் பொது, குழந்தை அந்த பொருளை நேரடியாக பார்த்து, உணர்ந்து, நுகர்ந்து, அனுபவித்து கற்கிறார்கள் (Multi Sensory Stimulation). அனுபவத்தின் மூல கற்பதால், குழந்தைகளுக்கு வேறுபடுத்தி (Discrimination ability) பார்க்கும் திறம் வளரும். இந்த குழந்தை ஒரு பொழுதும் தக்காளியை ஆப்பிள் பழம் என்று சொல்லாது, ஏனென்றால் இந்த குழந்தைக்கு ஆப்பிளின் வாசனை, ருசி தெரியும் ..

விதி – 8 : உளவியலிலிருந்து தர்க்கத்திற்கு – ( From Psychological to logical)

முதலில் குழந்தைகள் உணர வென்றும், பிறகு தான் அதை பற்றி நாம் கேள்விகள் கேட்கலாம். குழந்தைகளை உளவியல் ரீதியாக கற்பிக்காமல் தர்க்க ரீதியாக கற்பித்தல், அந்த குழந்தைக்கு புரிதலில் சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது

விதி – 9 : உண்மையானவற்றிலிருந்து மாதிரிக்கு – ( From actual to representative)

முதன் முதலில் சொல்லிக்கொடுக்கும் பொழுது உண்மையான வடிவத்திலும், பிறகு மாதிரி அல்லது பொம்மை வடிவத்திலும் சொல்லிக்கொடுக்கலாம்

இது அனைத்து நேரங்களிலும் சாத்தியம் இல்லை என்றாலும், முடியும் விஷயத்தில் இந்த விதியை கடைபிடிப்பது குழந்தைக்கு பலன் அளிக்கும். குழந்தையை கொண்டு சென்று காண்பிக்க கூடிய விஷயங்களுக்கு மட்டும் இந்த விதி பொருந்தும்.

விருப்பு வெறுப்புகளை அறிதல்

பெரும்பாலான பெற்றோர்கள் அல்லது ஆசிரியர்கள் குழந்தைகளை கற்பிக்க முயற்சிக்கும் பொழுது சந்திக்கும் சிக்கல்கள் என்னவென்றால்:

  • குழந்தைகள் தயாராக இல்லை
  • குழந்தைகள்  கற்றுக்கொள்ள முயற்சிசெய்யாமல் இருப்பார்கள்
  • குழந்தைகள் ஒரு இடத்தில் உட்கார மாட்டார்கள்
  • குழந்தையால் கவனம் செலுத்த முடியவில்லை
  • நான்சொல்லி கொடுப்பது புரியவில்லை
  • படிப்பில் விருப்பமில்லை

குழந்தைக்கு ஒரு விஷயத்தை கற்றுக்கொடுக்குமுன் நாம் அதற்கு தயாராக இருக்கிறோமா இல்லையா என்று பார்க்க வேண்டும். நம் குழந்தைகளை நாம் புரிந்துகொண்டோமா இல்லையா என்று பார்க்க வேண்டும். புரிந்துகொள்வதற்கு நாம் என்ன முயற்சிகள் எடுத்துள்ளோம் என்று பார்த்தால் அது மிக மிக குறைவாகவே காணப்படும்.

முதலில் உங்கள் குழந்தையின் விருப்பு வெறுப்புகள் உங்களுக்கு தெரிந்திருக்க  வேண்டும். இதை நீங்கள் கீழே குறிப்பிட்டுள்ளது போல் ஒரு பட்டியல் இடலாம்.

விருப்பமானவைகள் விருப்பமற்றவைகள்
உணவுகள்உணவுகள்
விளையாட்டுகள்விளையாட்டுகள்
கற்கும் முறைகள்கற்கும் முறைகள்
இடங்கள்இடங்கள்
பொருட்கள்பொருட்கள்
வார்த்தைகள்வார்த்தைகள்
நபர்கள், இன்னபிறநபர்கள், இன்னபிற

பிடித்த மற்றும் பிடிக்காதவற்றை கண்டறிந்து வரிசைப்படுத்துதல்

ஒரு குழந்தைக்கு 5 உணவு வகைகள் விருப்பமானவை என்றால் அதில் மிக மிக அதிக விருப்பமானதை எதுவோ, அதை நீங்கள் வரிசைப்படுத்த (Ranking) வேண்டும்.

  • மிக அதிக விருப்பம் – 5
  • மிக விருப்பம் – 4
  • விருப்பம் – 3
  • விருப்பமில்லை – 2
  • துளியும் விருப்பமில்லை – 1

உங்கள் குழந்தையின் விருப்பங்களையும் அதன் வரிசையும் உங்களுக்கு தெரியவில்லை என்றால், உங்களால் எந்த ஒரு விஷயத்தையும் சரியான முறையில் சொல்லிக்கொடுக்க முடியாது. யூகத்தின் மூலம் கற்பிக்காமல், குழந்தையை புரிந்த பின் கற்பிப்பது பயனளிக்கும்.

விருப்பங்களையும் கவனக் குவிப்பின் அளவுகளையும் கண்டறிதல்

எதாவது ஒரு வேலை செய்யும்போது உங்கள் குழந்தையால் எவ்வளவு நேரம் ஆர்வத்துடனும், கவனமாகவும், அவ்வேலையை செய்ய முடிகிறது என்பதை குறித்து வைத்துக்கொள்ளுங்கள் . அவை சில வினாடிகளாகக் கூட இருக்கலாம்

இவற்றைப் புரிந்து கொள்ளுதல் என்பதே கற்றலுக்கும் கற்றுக்கொடுத்தலுக்குமான இணைப்புப்பாலம்

விருப்பங்களையும், கவனக்குவிப்பின் அளவுகள்

உங்கள் குழந்தையின் விருப்பங்களும் அதில் அவர்கள் செலுத்து கவன அளவுகோல்கள் உங்கள் தெரிந்தால், நீங்கள் உங்கள் குழந்தையை நன்கு புரிந்துகொள்வீர்கள்.

உதாரணத்திற்கு, உங்கள் குழந்தைக்கு வண்ணம் தீட்டுதல் பிடிக்கும், அதை அவர்கள் 40  வினாடிகள் ரசித்து செய்வார்கள். பிறகு கவனச்சிதறல் ஏற்படும் என்று வைத்துகொள்ளுங்கள். இப்பொழுது நீங்கள் வண்ணம் தீட்டுவதை 10 நிமிடங்கள் செய்ய வைத்தீர்கள் என்றால் குழந்தைக்கு அது பிடிக்காது. அதை விட்டு விலகி செல்ல பார்ப்பார்கள்.

உங்கள் குழந்தையால் 5 நிமிடம் வரை வரைய முடியும் என்றால், நீங்கள் உங்கள் குழந்தைக்கு 5 நிமிடம் வரை அதை செய்ய சொல்லாமல் அதை விட குறைந்த நேரத்திற்கு கொடுக்க வேண்டும். அதாவது 3 நிமிடம் மட்டும்.

இப்படி கொடுப்பதினால் குழந்தைகளுக்கு தான் ரொம்ப நேரமாக ஒரு விஷயத்தை செய்து கொண்டிருப்பதாக தோன்றாது. அவர்களுடைய கவன சிதறல் 5 நிமிடத்திற்கு மேல் தான் ஏற்படும், அனால் நாம் அதற்கு  முன்னதாகவே அந்த செயலை நிறுத்தி வேறு ஒரு செயலில் கவனத்தை திருப்ப வேண்டும்.  பிறகு  மீதம் உள்ள 2 நிமிடத்திற்கு அழைத்து வரைய சொல்ல முடியும்

முதலில் இதனை செயல்படுத்தும் பொழுது குழந்தைகளுக்கு பிடித்தமான விஷயங்களை மற்றும் பயன்படுத்துங்கள். ஆர்வத்தையும், கவன குறிப்பின் அடிப்படையில் ஒரு விஷயத்தை நீங்கள் உங்கள் குழந்தையிடம் செய்யும் பொழுது குழந்தைகளுக்கு சலிப்பு, கவன சிதறல், விருப்பமில்லாமை தோன்றாது.

விருப்பங்கள்கவனக்குவிப்பின் அளவுகள்கவனச்சிதறலை உண்டாக்கும் காரணிகள் 
அடுக்குதல் விளையாட்டு5 நிமிடங்கள்புதிய விளையாட்டு பொருட்கள்
வரைதல்40 வினாடிகள்சப்தங்கள், புதியவர்களின் தலையீடு
கண்களை மூடி விளையாடுதல்2 நிமிடங்கள்பயம், புதிய சூழல், தோல்வி
   

பெற்றோர்களின் கவனத்திற்கு

குழந்தைகள் முதலில் ஒரு திறன் சார்ந்த விஷயத்தை கற்றுக் கொள்ளும் பொழுது, அவர்கள் ஆர்வத்தை தூண்ட ஊக்குவிப்பு தேவை. அப்பொழுது நீங்கள் அதை முறை படுத்த கூடாது. உங்கள் பார்வையில் முறைப்படுத்துதல் சரியென்று பட்டாலும், குழந்தையின் பார்வையில் அது அவர்களை ஊக்குவிக்காது, ஆர்வமளிக்காது

குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கும் பொழுது மட்டும் விருப்பத்தின் அடிப்படையில் செய்யவும். எல்லா நேரத்திலும் குழந்தையின் விருப்பத்தின் அடிப்படியில் நடந்துகொள்வது என்பது சாத்தியமில்லை. குறிப்பாக அடம்செய்யும் பொழுது கண்டிப்பாக அவர்களின் விருப்பத்தின் அடிப்படியில் நடந்துகொள்ள கூடாது

பிற குழந்தைகளோடு ஒப்பிடுதல் கூடவே கூடாது மற்ற குழந்தையோட நீங்கள் ஒப்பிடும் பொழுது உங்கள் குழந்தையை நீங்கள் மதிக்கவில்லை என்று பொருள். தொடர்ந்து ஒப்பிடுவதனால் அவர்களிடம் எதிர்வினை செயல்கள் காணப்படும்

குழந்தைகளுக்கு நீங்கள் பயிற்சியளிக்கும் பொழுது ஆரம்பமும், முடியும் மிக சுலபமான பயிற்சியை கொடுக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், அடுத்த முறை குழந்தைகள் நீங்கள் கூப்பிட்டால் வர மாட்டார்கள் .

நீங்கள் உங்கள் குழந்தைக்காக 5 திறன் சார்ந்த பயிற்சிகளை தயார்செய்துள்ளீர்கள், அதை 20 நிமிடத்தில் செய்து முடிக்கலாம் என்று கணக்கிடுள்ளீர்கள் அனால் உங்கள் குழந்தை அதில் மூன்றை மட்டுமே 20 நிமிடத்தில் செய்துள்ளார். உங்கள் கண்பார்வையில், உங்கள் குழந்தை சரியாக முயற்சி செய்யவில்லை என்று தோணும். ஆனால் உண்மையில், இது குழந்தையின் தவறில்லை .

குழந்தையால் எவ்வளவு முடியுமோ அதை தான் நீங்கள் எதிர்பார்க்கவேண்டும், எதிர்பார்ப்பை குறைக்கலாம் அனால் ஏற்றக்கூடாது

குழந்தையால் செய்ய முடிந்தும் அவர்கள் அதை செய்யவில்லை என்றால் நாம் காரணத்தை மேலும் ஆராய வேண்டும் (நம்முடைய அணுகுமுறை, நாம் பயிற்சிக்கு தேர்ந்தெடுத்த கால நேரம், பயிற்சியில் உள்ள சிரமும்  )

செய்ய வேண்டியவைகள்செய்யக்கூடாதவைகள்
எவ்விதமான எதிர்பார்ப்புகளுமற்ற , தொடர்ந்த ஊக்குவிப்புடன் கூடிய அணுகுமுறைசரி செய்தல் (தவறுகளை களைதல் அல்ல )
குழந்தைகளின் விருப்பத்தின் அடிப்படையில் கற்றுக்கொடுப்பதையும் , கற்றுக்கொடுக்கும் பொருட்களையும் தேர்ந்தெடுத்தல்பிற குழந்தைகளோடு ஒப்பிடுதல்
குழந்தைகளின் உச்ச நிலை கவனக்குவிப்பை விட சற்று குறைவான கால அளவிலான செயல்களை கொடுக்க வேண்டும்உங்களுக்கு குறைவான நேரம் என எண்ணுவதை உங்கள் குழந்தையும் ஏற்றுக்கொள்ளும் என நம்புவது
கற்றுக்கொடுக்கத் துவங்கும்போதும் , முடிக்கும்போதும் மிக எளிமையானவற்றை கொடுக்க வேண்டும்மிகவும் நேர்த்தியாக ஒரு செயலை செய்து முடிக்க வேண்டும் என்றோ, நிர்ணயிக்கப்பட்ட கால அளவிற்குள் முடிக்க வேண்டும் என்றோ நீங்கள் எதிர்பார்ப்பது போல செய்து முடிக்க வேண்டும் என நிர்பந்திக்கக்கூடாது
  

விளையாட்டு அடிப்படையில் சொல்லித்தருவது ரொம்ப சிறந்தது. குழந்தைகள் மாறணும்னு எதிர்பார்க்காதீங்க, நீங்க மாறுங்க. காரணம் என்னவென்றால், மேலே இருந்து கீழே இறங்கி வருவது சுலபம்.

குழந்தையின் வயதில் இருந்து அவர்கள் செயல்களை பார்க்க வேண்டும், உங்கள் வயதில் இருந்து அல்ல. குழந்தைகளை உங்கள் வயதிற்கு ஏற்றாற்போல் நடந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்ப்பது சாத்தியமில்லை.

குழந்தைகளுக்கு ஆழமான வேர்களையும், வலிமையான சிறகுகளையும் கொடுங்கள்

கேள்வி பதில்கள்

கே – கற்றல் சிரமம் உள்ள குழந்தைக்கு எப்படி சொல்லி கொடுப்பது ?

ப – சிறப்பு குழந்தைகளிடம், புதிது புதிதாக கற்றுக்கொள்ளவேண்டும் என்று எதிர்பார்க்காமல், அவர்களுக்கு தெரிந்த விஷயத்தை அறிமுக படுத்திவிட்டு. ஊக்குவியுங்கள்.

ஒரு குழந்தைக்கு ஒரு எண்ணுக்கு அடுத்து என்ன எண் என்பது தெரியும்  அனால் ஒரு எண்ணுக்கு முன் என்ன எண் என்பது சிரமம். அப்பொழுது நீங்கள் தெரிந்த விஷயத்தில் இருந்து தான் ஆரம்பிக்க வேண்டும். பிறகு ஆர்வத்தை தூண்ட வேண்டும் . அதற்கு அவர்கள் ஜெயிக்க வேண்டும்

கே – அரசு பள்ளியில் 8 ஆவது வகுப்பு படிக்கும் மகனுக்கு கணிதம் சுத்தமாக பிடிக்கவிலை. தமிழ் விரும்பி படிக்கிறான், ஞாகபக சக்தி நன்றாக உள்ளது. அடுத்து வரும் வகுப்புகள் இவனால் சாதாரண பள்ளிக்கூடத்தில்  எதிர்கொள்ளமுடியுமா ?

ப – அவரை முழுமையாக பரிசோதனை செய்யாமல் அவருடைய குறைகளை கண்டறியாமல், இதற்கு பதில் கூற இயலாது. கணிதம் மட்டும் சிரமப்படுகிறார்கள் என்றல் அது கற்றல் குறைபாடாக கூட இருக்கலாம்

கே – என் பயனுக்கு காது  வழியாக விஷயத்தை கேட்டால் பதில் சொல்லுவான், ஆனால் அதேயே நேருக்கு நேர் நின்று கேட்டால் பதில் சொல்ல மாட்டான். அப்படியே கண் பார்வையில் பார்க்க வைத்து ஏதாவது கேட்டால், அதற்கு தப்பான  பதில் தான் கூறுவான். எழுதவோ படிக்கவோ மாட்டான். ஆரம்பத்தில் எழுதிக்கிட்டு இருந்தான், பிறகு விருப்பம் இல்லாத காரணத்தால் அந்த பழக்கத்தை விட்டுவிட்டான். சிறப்பு குழந்தை என்று தெரிந்த பிறகு அவனை நாங்கள் கட்டாய படுத்துவதில்லை.. எதாவது பொருளை கையில் எடுத்துக்கொண்டான் என்றல் இரண்டு நாள் ஆனால் கூட அதை கையில் வைத்துக்கொண்டே இருப்பான். இவர்களை எப்படி வழி நடத்தி செல்ல வேண்டும்  ?

ப -கையில் பொருள் வெய்துகொண்டிருப்பது புலன் சார்ந்த காரணமாக இருக்கலாம். செவித்திறன் இவருக்கு பலமாக உள்ளதால் நீங்கள் அதன் மூலம் இவருக்கு சொல்லிக்கொடுக்கலாம். எல்லா கேள்விகளுக்கும் பதில் சொல்கிறார்களா அல்லது தெரிந்த அல்லது விருப்பமா கேள்விகளுக்கு மட்டும் பதில் அளிக்கிறார்களா என்பதை சிறு சிறு விளையாட்டு மூலம் கண்டறியலாம்.

கே – எண்களை வரிசையாக அவனால் வாசிக்க முடியுது, ஆனால்  முன்னாடி/ பின்னாடி உள்ள எண் எப்படி சொல்லிக்கொடுப்பது. நாலுக்கு பிறகு என்ன, மூன்றுக்கு முன்னாடி என்ன போன்ற கேள்விகளை அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவனுக்கு எப்படி புரிய வைப்பது என்று எனக்கும் தெரியவில்லை

ப – தரையில் மூன்று வட்டங்கள் வரையவும், ஒவ்வொரு வட்டமும் குழந்தைக்கு தெரிந்த வண்ணத்தில் இருக்க வேண்டும்

சிகப்பு , மஞ்சள் , பச்சை என்ற வரிசையில் இருக்கும் வட்டத்தில் நடக்க செய்யுங்கள். சிகப்பு முதல், மஞ்சள் இரண்டாவது, பச்சை மூன்றாவது, இப்பொழுது அவர் பச்சை நிறத்தில் நிற்கும் பொழுது, அதற்கு பின்னால் என்னென்ன நிறங்கள் இருக்கு என்று கேளுங்கள். குழந்தையால் திரும்பி பார்க்காமல் பதில் அளிக்க முடிகிறதா என்று பாருங்கள்.

பிறகு வட்டத்துக்கு பதிலாக எண்களை வரிசையாக எழுதி வைத்து செய்யலாம். இந்த பயிற்சிக்கு அப்புறம் புத்தகத்தில் சொல்லிக்கொடுங்கள். மனக்கணக்கில் இவருக்கு சிரமம் இருப்பதால், சுலபமாவன வழியில் இதனை சொல்லிக்கொடுக்க வேண்டும்.

கே – லோக்கடவுன் காலகட்டத்தில் எப்பொழுதுமே நான் எண் குழந்தையுடன் இருந்தேன், இப்பொழுது நான் வேளைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளதால் அதே அளவு நேரம் இப்பொழுது செலவிட முடியவில்லை. இதனால் அவர்கள் வேதனை அடைகிறார்கள். இதனை எப்படி சமாளிப்பது ?

ப – குடும்பத்தில் உள்ள மற்ற உறுப்பினர்களை குழந்தையுடன் அதிக நேரம் செலவிட முயற்சி செய்யுங்கள். அவருக்கு தான் விருப்பப்பட்டதை செய்வதற்கு ஒரு கூட்டாளி கிடைக்கவில்லை. வெளிய போகவோ, மற்ற குழந்தைகளோட விளையாடவோ வாய்ப்பு இல்லாததுனால அவர்களுக்கு ஒரு துணை தேவை படுகிறது, அது அம்மாவாக இருக்கணும்னு அவர்கள் விரும்புகிறார்கள். 5 வயது குழந்தைக்கு இந்த மாதிரி ஒரு எதிர்பார்ப்பு இருப்பது ரொம்ப ரொம்ப சாதாரணம். குழந்தைகளை நீங்கள் ஒருத்தரை சார்ந்து இல்லாமல், சுதந்திரமாக செயல்பட மாற்றுங்கள். 24 மணி நேரமும் நீங்கள் உங்கள் பிள்ளைகள் கூட இருந்தால் தான் அவர்கள் சந்தோஷமா இருப்பார்கள் என்று நீங்கள் நினைப்பது கற்பனையில் மற்றுமே நடக்கும், நிஜத்தில் சாத்தியம் இல்லை என்பதை நீங்கள் உணரவேண்டும். இது எல்லோருக்குமே பொருந்தும்.

பெற்றோர்கள் எல்லோருக்குமே இப்போது இருக்கும் சவால் என்ன வென்றால், லோக்கடவுன் பிறகு பள்ளிக்கூடம் திறந்த பிறகு நாம் என்ன செய்ய போகிறோம்?

குழந்தைகள் நாம் சமாளிப்பது எப்படி, குழந்தைகள் பள்ளிக்கூட சூழலுக்கு தங்களை எப்படி மாற்றிக்கொள்வார்கள்?

இது எல்லோருக்கும் ஏற்படக்கூடிய ஒன்று தான், இது தனிப்பட்ட பிரச்னை இல்லை, இதுவும் கடந்து போகும் இது கடந்து போக கூடிய நிலை, இதை பற்றி நிறைய யோசிக்கவோ, கவலைப்படவோ தேவையில்லை

கே – என் மகனுக்கு வயது 10 ஆகிறது, எழுதுவதில் ரொம்ப ஆர்வம் இல்லை, ஆனால் படிப்பதில் மிகுந்த ஆர்வம் உள்ளது. எல்லா நேரத்திலும் எதாவது புத்தகத்தை கொண்டு வந்து அதில் இருப்பவை என்ன என்ன என்று கேள்வி கேட்டுக்கொண்டே இருக்கிறான். எனக்கு நேரம் இருக்கும் பொழுது அவனுக்கு பதில் அளிக்கிறேன், ஆனால் முக்கிய வேலையில் இருக்கும் பொழுதோ , ஓய்வு எடுக்கும் பொழுது அவனோட இந்த செயல் எனக்கு எரிச்சலை ஏற்படுத்துகிறது, அந்த நேரத்தில் என்னை கட்டுப்படுத்திக்கொண்டு அப்பறம் பதில் கூறுகிறேன் என்று சொன்னால், அவன் அப்பாவிடம் சென்று அர்த்தம் கேட்கிறான். வாசலில் நின்று கொண்டு முன்பின் அறியாதவர்களிடமும் பேசுவது, கேள்வி கேட்பது போன்றவற்றை செய்கிறான்

ப – நிறைய பெற்றோர்களிடம் இந்த மாதிரி பிள்ளைகள் கேள்வி கேட்க மாட்டேங்கிறார்கள் என்று வறுத்த படுகிறார்கள் , நீங்கள் சந்தோஷ பட வேண்டும்.

கேள்விகள் கேட்கும் பழக்கத்தை தவறு என்று நாம் கூறமுடியாது. குழந்தைக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது, இந்த ஆர்வத்தை நாம் சரியான வழியில் கொண்டு செல்ல முடியுமா என்று பார்க்க வேண்டும். நீங்கள் உங்களோட இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தையோட அதிக நேரம் செலவிட்டால் உங்கள் கவனத்திற்காக கூட குழந்தை இதை செய்யலாம். இது கவனத்தின் காரணமாக ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு ஒரு நேரம் ஒதுக்கிக்கொள்ளுங்கள். குழந்தையிடம் கேள்வி கேட்க வரும்பொழுது,  அந்த கேள்வியை எழுதச்சொல்லுங்கள், பிறகு நீங்கள் அதற்கு பதில் அளிக்கலாம்.

நீங்கள் உங்கள் குழந்தையிடம் கேள்வி கேளுங்கள். கேள்வி அவரின் சிந்தனையை தூண்டுவது போல் இருக்க வேண்டும். (நீ என்ன நினைக்கிறேன்னு சொல்லு)

அவர்களுடய பதிலை வைத்து அவர்களின் இந்த பழக்கத்தின் காரணத்தை கண்டறியலாம். கேள்விகள் அவர்களை உதாசீன படுத்துவதாகவோ, மட்டம் தட்டுவதாகவோ இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்

கே – என் மகனுக்கு 9  வயது ஆகிறது,  ஒத்த வார்த்தைகள்  மட்டும் பேசுவான். அவனை இரண்டு வார்த்தைகளோ வாக்கியமோ  பேச முயற்சி செய்தால் அவனுக்கு ரொம்ப கோவம் வருகிறது, அந்த இடத்தை விட்டு விலகி சென்றுவிடுகிறான். ஒரு பதட்டத்தோடவே இருக்கிறான். பாடல் கேட்கும்பொழுது அமைதியாக காணப்படுகிறான், உரையாடல் என்றாலே அதை தவிர்க்க பார்க்கிறான்

ப – முதலில் உங்களிடத்தில் நீங்கள் அதிக “corrections செய்கிறீர்களா என்று பாருங்கள். உதாரணத்திற்கு நீங்கள் “முறுக்கு கொண்டு வா”என்று அவரை சொல்ல வைக்க முயற்சி செய்கிறீர்கள், ஆனால் உங்கள் பிள்ளை முயற்சி செய்து “”முறுக்கு”” என்று ஒரு வார்த்தை மட்டும் தான் சொல்கிறார்கள் என்றால், நீங்கள் உடனே “ஒழுங்காக சொல்லு”” என்று நீங்கள் சொல்வீர்கள். உங்கள் பிள்ளைக்கு கேள்வி புரிந்து உள்ளது, அதற்கு அவர் முயற்சி செய்து தன்னால் முடிந்த பதிலை கூறியுள்ளார். இருந்தாலும் நீங்கள் அவரை தொடர்ந்து திருத்தும் செய்கிறீர்கள், ஒருத்தரை திருத்த முயற்சி செய்தால் அவருக்கு ஆர்வம் வருமா  தப்பிக்க தோணுமா?

உதாரணத்திற்கு நீங்கள் பிரியாணி சமைத்துக்கொண்டிருக்கும் பொழுது, உங்கள் தாயார் வந்து :

  • என்ன பண்ணிக்கிட்டு இருக்க
  • ஏன் பட்டை கிராம்பு எல்லாம் இப்போ போடுற, அதை கடைசியா போடணும்
  • கறியை ஏன் இப்போ போட்டே, முதல அரிசியை போடணும்
  • நல்ல வேகணும், டம் வைக்கணும்

என்று அவர்கள் கூறினால் உங்களுக்கு எப்படி இருக்கும். உங்கள் தாயார் உங்களை குறை கூறவில்லை, உங்கள் செயலை திருத்த முயற்சி செய்திருக்கிறார்கள். இப்படி அவர்கள் தினமும் செய்தால், உங்கள் தாயாரை நீங்கள் சமயலறையில் அனுமதிக்கவே மாட்டிர்கள். நிறைய  விஷயம் புரிந்த நமக்கே திருத்தும் செய்யும் பொழுது ஒரு பதட்டம் வருகிறது, அல்லது ஒரு வெறுப்பை கொடுக்கிறது. அப்போ உங்கள் குழந்தைக்கு பேச்சில் பிரச்சனை இருக்கும் பொழுது, அவர் முயற்சி செய்து பேசும்  பொழுது, அவரை ஊக்குவித்து பாராட்டாமல், அவரை திருத்தும் செய்ய நீங்கள் முயற்சிப்பது, அந்த குழந்தைக்கு நீங்கள் கொடுக்கும் தண்டனை.

உங்கள் குழந்தை சரியாக பேசுவதை விட, சரியாக பேசவேண்டும் என்று முயற்சி செய்வது தான் மிக மிக முக்கியம். அவருடைய முயற்சியை நீங்கள் பாராட்டும் பொழுது, அவருக்கு ஊக்கம், உற்சாகம், சுயமரியாதை, தன்னம்பிக்கை கூடும். குழந்தையை சுதந்திரமாக விட்டால் அவர்களுக்கு ஆர்வம் கூடும்

(அடுத்த தடவை சார் சொன்ன பிரியாணியோட ரெஸிபி கொடுத்தால் நன்றாக இருக்கும்)

கே – என் குழந்தைக்கு 8 வயது ஆகிறது அவர் ஒத்த வார்த்தைகள் மட்டும் பேசுவார், ஒரு உரையாடலுக்கு தேவையான விஷயங்கள் இன்னும் வரவில்லை. அதை எப்படி கொண்டு வருவது ? என் மகனுக்கு verbal apraxia உள்ளது, அதனால் தாடை சுற்றி உள்ள தசைகள் வலுவிழந்து காணப்படும்

ப – குழந்தைகளுக்கு பேசுவதில் சுதந்திரம் தேவை. பேசுவதை இரண்டு வகையாக பிரிக்கலாம், ஒன்று கட்டமைக்கபட்டது(Structured) , மற்றொன்று கட்டமைக்கபடாதது.(Unstructured)

தெரபியில் , வகுப்பறையில் கிடைப்பது  கட்டமைக்கபட்டது (Structured)

பாட்டு படுவது, கதை சொல்வது, கட்டமைக்கபடாதது.(Unstructured)

அவருக்கு புத்தகம் படிக்க பிடிக்கும், ஆனால் அவர் புத்தகம் படிக்கும் பொழுது நீங்கள் அதை திருத்த முயற்சி செய்தால் அவர்களுக்கு ஒரு எரிச்சல் உண்டாகும்.

அவர்களுக்கு பிடித்தமான காரியத்தை செய்யும் பொழுது அதை திருத்தாதீர்கள், அதை கட்டமைக்க முயற்சி செய்யாதீர்கள். அவர்கள் அந்த காரியத்தை முழுமையாக செய்து முடித்த பிறகு, அவர்கள் என்ன செய்தார்கள் என்று கேளுங்கள், அவர் என்ன பதில் சொன்னாலும், அதை கேட்டுக்கொள்ளுங்கள். குழந்தைகளைபொறுத்தவரையில் அவர்கள் அம்மா அப்பா தான் பேசுவதை கேட்கிறார்களா இல்லையா என்று தான் எதிர்ப்பார்கள், எந்த குழந்தையும் தான் பேசுவது அவர்களுக்கு புரியுதா இல்லையா என்பதை பற்றி கவலை பட மாட்டார்கள். குழந்தை சொல்வது நமக்கு புரியவில்லை என்றால், நாம் சரியாக குழந்தையை வளர்க்க வில்லை என்று நினைத்துக்கொண்டு, எதாவது செய்ய முயற்சிக்கிறோம். அதை செய்யாதீர்கள்.

அவர்களுக்கு ஆர்வம் இல்லாத எந்த ஒரு விஷயத்தையும் நீங்கள் அவர்களிடம் சென்று சேர்க்க முடியாது. To all parents, do not do over corrections, it is an punishment actually.

கே – என் மகன் எழுதும் பொழுது ஒரு எழுத்தின் மேல மற்ற எழுத்தை எழுதுகிறான் (overwriting

ப -உங்கள் பிள்ளை தொலைக்காட்சி பார்க்கும் பொழுது  மிக அருகில் நின்று பார்க்கிறாரா ?

புத்தகம் எதாவது படிக்கும் பொழுது கண்ணனுக்கு மிக அருகில் வைத்து பார்க்கிறாரா ? சில நேரத்தில் கண் பார்வையில் குறைபாடு இருந்தால் Overwriting ஏற்படும்

கே – மகனுக்கு நிறைய ஞாபக சக்தி உள்ளது, நன்றாக பாடுகிறான். ஆனால் எந்த ஒரு பாடல் பாடினாலும் நான்குவரிகளுக்கு மேல் பாடுவதில்லை. முழு பாட்டை எப்படி பாடவைப்பது

ப – பெரியவர்களே பலரால் முழு பாடல் பட முடியாது. நம்மளோட மனசு சந்தோஷமா இருப்பதற்காக மட்டும் அவரை நாம் பாட நிர்பந்திக்க கூடாது. பாடகர்கள் அனைவரும் புத்தகத்தை பாத்து தான் படுகிறார்கள், அதனால் நீங்கள் அவரை பார்த்து பாடும் பழக்கத்தை அறிமுகப்படுத்துங்கள்

கே – என் மகனுக்கு 9 வயது ஆகிறது. அவன் 4 வயதில் தான் பேச ஆரம்பித்தான்(மைல்டு ஆட்டிசம்). அவனுக்கு தேவையான அனைத்தையும்  அவன் கேட்டு பெற்றுக்கொள்வான். அவனை சுற்றி நடக்கும் விஷயங்களை கவனிக்க மாட்டான். அவனுக்கு சத்தம் பிடிக்க மாட்டேங்கிறது, குறிப்பாக குழந்தையின் அழுகை குரல் கேட்டல் காதை  மூடி கொள்வான். அவனுடைய தம்பிக்கு இப்போது 3 வயது ஆன பிறகும் கூட, இப்போது அவன் தம்பி அழுதா கூட இவனால் அதை சகித்துக்கொள்ள முடியவில்லை . இதனால் அவன் மற்ற குழந்தைகள் கூட விளையாடுவதற்கே தயங்குகிறான் ஏனென்றால் குழந்தைகள் எப்பொழுது வேண்டுமானால் அழலாம் என்பதால். OT அவனை அதிகமான சத்தம் உள்ள இடத்துக்கு கூட்டிக்கொண்டு பொய் பழகினால் தான் இது மாறும் என்று கூறுகிறார்கள் ..

ப – புலன் சார்ந்த பிரச்சனைகள்/வளர்ச்சிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் மாறுபடுகிறது . இவருக்கு இருப்பது Hypersensitivity in Auditory sense .  OT சொன்னது போல் நிறைய மாற்றங்களுக்கு அவரை பழக்க வேண்டி இருக்கும், ஆரம்பத்தில் அவர் இதற்கு சிரமப்படலாம், அழலாம். பல்வேறு வகையான சத்தங்களை கேட்பதன் மூலம் இது குறைய வாய்ப்பு உள்ளது

எனக்கு புரிந்தவரை இங்கே பகிர்ந்து உள்ளேன், பிழைகளுக்கு மன்னிக்கவும். தவறுகளை தயங்காமல் சுட்டிக்காட்டவும்.

இப்படிக்கு,

சரண்யா & கார்த்திகேயன்

karthiksaranyaparents@gmail.com

Leave a comment